• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 13 ஜனவரி, 2019

  தைப்பொங்கல் நல் வாழ்த்துகள் 2019
  வார்த்தைக்குள் மனித நேயத்தை மறைத்து வைத்திருக்கும் சூத்திரம்.
  வழிதேடி பிரதியுபகாரம் வழங்கவே மனம் துடிக்க வைக்கும் மந்திரம்
  வாய்க்கால் தேடி  கலங்கமில்லா அன்பைக் காட்டத் துடிக்கும் சாகசம்
  மனிதனுக்கு மட்டுமன்றி மிருகங்களையும் ஆட்டிப் படைக்கும் தூண்டில்
  இந் நன்றியுணர்வே நாம் பொங்கும் பொங்கல்

  தீவினை அகன்றிட மனத் தூய்மைகள் விளங்கிடும் நாள் 
  போனவை போகட்டும் நல்லவை நிலைக்க வழிதேடிடும் நாள்
  சேர்த்துவைத்த குப்பைகளை தேதி சொல்லி அழித்திடும் நாள்  
  வாழ்வினில் சேர்த்த தீவினையாவையும் நன்மனங்கொண்டே அழித்திடும் நாள்
  நாம் காணும் போகிப்பொங்கல் நன்னாளே

  நாம் வாழக் காரணம் யாதென்று வாதிடத்தெரிந்த மனிதன்
  சீரோடும் சிறப்போடும் நோயின்றி வாழக் காரணம் யாதென்று
  சிந்திக்கத் தெரிந்து செயற்படத் துணிந்த சிந்தனை மனிதன்
  வயிற்றுப் பசித் தீர்க்கும் அடிப்படைக் காரணி யாதென்றறிந்து
  ஆய்வுக்கண் கொண்டு நன்றி தெரிவிக்கும் நன் நாளாம்
  நாம் காணும் தைப்பொங்கல்

  பிரளயத்தின் பிள்ளை பல பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய்
  நாளும் பொழுதும் கண்வெட்டாமல் எம்மைப் பாதுகாக்கும் தாதி
  தான் மாய்ந்தால் உலகம் மாயும் என்னும் தத்துவத்தை
  உலகறியச் செய்து உலகை ஆளுகின்ற உலகரசன் ஆதவனை
  வருடம் ஒருமுறை வாயார வாழ்த்தி மனமாரப் போற்றும்
  பொங்கலே தைப்பொங்கல்

  நன்னிலம் கண்டு நானிலம் வாழ தன்னலங்கருதா உழவன்
  மண்மீது விதைத்து மழைமேகம் கண்டு பொன் பூச்சொரிந்து
  புதுநெல் காண விளைநிலத் தாயின் மடிமீது காளையை
  நடைபயில வைத்தான் காளை ஆண்டானின் சொற்கேட்டு
  சேற்றிலே புதைந்தது செந்நிலந் தன்னிலே நன்னிலம் தந்தது
  தொண்டுக்குப் பரிசாக சிங்காரித்த காளையைக் கொண்டாடும்
  நன்னாளாம் மாட்டுப் பொங்கல்

  வருடம் முழுதும் வளமாய் வாழ நாளும் பொழுதும்
  நலமே வாழ காலம்நேரம் கணக்கில் கொள்ளா துழைத்து
  ஓயாப் பணியை  ஒருவாராய் முடித்து ஓய்வாய் இருந்து
  உயர்வின் களிப்பை உறவினர் நண்பர் சுற்றங்கள் கண்டு
  போற்றிடும் நாளே காணும் பொங்கல்.

  அனைவருக்கும் 2019 தைத்திருநாள் நல்வாழ்த்துகள் 

  5 கருத்துகள்:

  1. பொங்கலாய் இனித்திடும் அற்புதமான வாழ்த்துப்பா.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
  2. வார்த்தைகளால் எம்மையும் கதிரவனையும் கட்டிப் போட்டு
   விட்டீர்கள்.நன்றியுணர்வு பொங்கி அன்பும் பண்பும் சமைத்திட
   உங்கள் கைகள் எழுதியபடியே இருக்க இறைவனைப் பிரார்த்தக்கின்றேன்.பொங்கல் வாழ்த்துக்கள்
   அனைவர்க்கும் உரித்தாகட்டும் .
   அன்புடன்
   கலா அக்கா.

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...