• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

  காதல் சொல்ல வந்தாள்  கனவுகளும் காட்சிகளும் தியான் உருவத்தைச் சுற்றி வலம் வர, சிக்கித் தவிக்கும் அவள் உணர்வுகளுக்குத் தாய் தினமும் கூறும் வார்த்தைகள் தடைவிதித்துக் கொண்டு இருந்தன. வாசுகி கட்டுப்பாடான பெண்தான் ஆனாலும், காதலுக்குக் கண் இல்லை என்பார்களே. எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்காது. சிலருக்குச் சிலரைப் பிடிக்கும். அதுவே நிச்சயமாகும் போது இணைவதும் சில சமயங்களில் இணைய முடியாமல் போவதும் இயற்கை.

  தியான் என்னைக் காண்பான். என்னிடம் ஒரு வார்த்தை பேசுவான் என மனதுக்குள் ஒரு ஆசைக் கோட்டையையே கட்டி வைத்திருந்தாள். அவனைக் காணும் போதெல்லாம் என் காதலைச் சொல்லிவிடலாமா! இல்லை இது பெண்மைக்கு இழுக்கா? என் காதல் என் தாயின் வேண்டுகோளுக்கு அவமதிப்பாகி விடுமா? மனதுக்குள் பெரிய போராட்டமே நடத்திக் கொண்டிருந்தாள், வாசுகி.

  அன்று திங்கள் மெல்லிய பனி மூட்டம் ஒருவரை ஒருவர் மறைக்கும் வண்ணம் தென்பட்டது. இருள் விலகிக் கொண்டிருக்கும் காலைப்பொழுது பஸ் தரிப்பில் பல்கலைக்கழகம் செல்வதற்காக வாசுகி காத்துக் கொண்டிருந்தாள். அருகே அழகான கம்பீரமான ஒரு ஆண்மகன். தன்னைக் கேட்காமல் தன் கண்கள் விலகி அவனை நோட்டமிட்டது.
   
  "வாசுகி!  அவன் அழைத்தான். திரும்பிப் பார்த்தாள்.

  “என்ன தெரியாதது போல் நிற்கிறாய்….”

   “ஓ அரவிந்த். எப்படி இருக்கிறீங்க? யாரோ Handsome Boy நிற்கிறார் என்று நினைத்துக்   கவனிக்கவில்லை"

  “Handsome  என்று சொன்னால் சரியா? அப்படி முழுமையாக நினைப்பது போல் தெரியவில்லையே. உன்னிடம் எத்தனை தடவை என் மனதிலுள்ளதை எடுத்துச்   சொல்லிவிட்டேன். நீதான் என்னை அலட்சியம் செய்கின்றாய். எனக்குப் பிடித்த உன்னுடைய பதிலுக்காக நான் காத்திருக்கின்றேன்”

  “பஸ் வந்திட்டு அரவிந்த். நான் பிறகு பேசுகிறேன். என் பதிலில் எந்தவித மாற்றமுமில்லை. என்னைக் கொன்று விட்டு எப்படி நான் உன்னோடு வாழ்வது. கற்பு என்பது மனதோடு சம்பந்தப்பட்டது என்று நான் பல தடவை உனக்குச் சொல்லியிருக்கிறேன். நீ எனக்கு நல்ல நண்பண்டா. காதலனாக என் மனம் வேறு ஒருவனுடன்தான் சல்லாபிக்கின்றது. பிறகு பேசுவோம்” என்றபடி பஸ்ஸுக்குள் வாசுகி ஏறினாள்.

  அரவிந்த் பல வருடங்களாக வாசுகிதான் தன் மனைவியாக வரவேண்டும் என்று அவள் பதிலுக்காக ஏங்கி நிற்கும் ஒருவன். வாசுகி குடும்பமும் அரவிந்த் குடும்பமும் நல்ல நண்பர்கள். அரவிந்த் மனதில் ஏதோ வகையில் வாசுகி புகுந்துவிட்டாள் என்பதா, புகுத்தி  விட்டான் என்பதா! தன் உள்ளக் காதலின் உருவத்தை எத்தனையோ முறை வாசுகியிடம் படம் போட்டுக் காட்டிவிட்டான்.

  ஆனால், வாசுகியோ ஒருவனைத் தன் மனம் பச்சை குத்திவிட்டது. அதை கிழித்தெடுத்து வேறு ஒருவனைப் பதித்து வைக்க எப்படி முடியும் என்று மறுப்புத் தெரிவித்துக் கொண்டாள்.
   
  மனதில் நிறைந்திருப்பவனிடம் தன் காதலைச் சொல்லும் தைரியமும் அவளிடம் இல்லை.

  மனதில் ஒருவன் இருக்க மற்றவனைக் கைப்பிடிக்கும் வேடதாரியும் அவள் இல்லை.

  இரு மனங்கள் காதலுக்காக ஏங்குகின்றன. ஆனால், யாருக்கு யாரென்று எழுதி வைப்பது ஏதோ ஒரு சக்தி என்பதை உணராதவர்கள் இல்லை அவர்கள்.

  அடிக்கடி சந்திப்புக்களும் பேச்சுக்களும் தொடர்ந்தாலும் ஆணித்தரமான உள்ளத்து வேட்கை மாறியதாக இல்லை.

  காலத்தின் போக்கில் வயது காத்திருக்காது அல்லவா. பெற்றோருக்கு எப்போதும் பெண்பிள்ளைகள் பாரமே. அது எந்த நாடாக இருந்தாலும் பிள்ளைகளைத்தாமே தாங்கி நிற்பதுபோல் தமக்குள்ளேயே ஒரு மனக்கோட்டை கட்டி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறே வாசுகி பெற்றோரும் அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார்கள்.

  ஐரோப்பிய வாழ்வில் தானாகவே தன் துணையைத் தேடும் சுதந்திரம் இருந்தும் பெற்றோர் ஆச்சார, அநுஸ்டானங்களுக்குக் கட்டுப்பட்டு மனதின் போக்கைக் கூடக் கட்டுப்படுத்தி வாழ்பவள் அல்லவா வாசுகி.

  பெற்றோர் திருமணத்திற்காக அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டனர். ஆனால், வாசுகிக்கோ சிறுவயதிலிருந்து பெற்றோர் ஊட்டி வளர்த்த கற்பென்னும் தியரி மனதுக்குள் ஆட்டம் போட்டுக் கொண்டே இருந்தது.

  மனதால் ஒரு பெண் ஒரு ஆணை நினைத்துவிட்டால், அன்றிலிருந்து அவன் அவளுக்குக் கணவனாகின்றாள். இதுவே அவள் சிறுவயதிலிருந்து மனதுக்குள் போட்டு வைத்திருக்கும் விரதம். இந்த விரதத்திலிருந்து அவளால் மீளமுடியவில்லை. ஆழமான உள்ளப் பதிவு என்றுமே அழியப் போவதில்லை அல்லவா.

  என்ன செய்வது? பெற்றோரை எதிர்க்க அவளால் முடியவில்லை. அதேவேளை முன்பின் தெரியாத ஒருவனுடன் வாழவும் முடியவில்லை. தன்னைப் பற்றி துளியளவும் சிந்திக்காத தன் மனதுக்குள் மாயமாய் மறைந்திருக்கும் வேணுவையும் நிச்சயிக்க வாசுகியால் முடியவில்லை.

  யாரென்று அறியாது என்றுமே பழகிப் பார்க்காத பெற்றோர் பேசும் பையனுக்குத் தன்னைத் தாரை வார்க்க வாசுகி மனம் ஒப்பவில்லை. சிந்தனையில் அவள் இடது பக்க மூளை தொழிற்படத் தொடங்கியது. முடிவுகளை எடுக்கவோ தீர்மானிக்கவோ ஆண்டவனை விட தன் மூளையைத்தானே அவள் நம்பியிருக்கின்றாள்.

  தெரியாத ஒருவனுக்குத் தலையை நீட்டிவிட்டு அவன் எப்படி என்று தெரிந்து கொள்ள வருடக்கணக்கில் முயன்று, முடிவில் தனக்கேற்றவன் அவனே என்று முடிவாகும் போது காலம் கடந்துவிடும், இல்லை அவனுடன் வாழமுடியாது என்னும் போது விவாகரத்தில் வந்து முடியும். அந்த வேளையிலும் பாதிப்பு என்னவோ பெண்ணுக்குத்தானே. சரியான நேரத்தில் சரியாக சிந்தித்து எடுக்கும் முடிவுதான் நிலைக்கும்.

  நீ நேசிக்கும் ஒருவனைவிட உன்னை நேசிக்கும் ஒருவனே உனக்குத் தேவையானவன் என்னும் முடிவை அவளுடைய மூளை கொடுத்தது. தீர்மானித்து விட்டாள் வாசுகி. தன் எதிர்காலத்தைச் சிறப்பான முறையில் கொண்டு செல்வதற்குத் தனக்கு ஏற்றவன் அரவிந்த் தான் என்று மனம் இட்ட கட்டளையை தலைமேற் கொண்டாள். தலைசீவிச் சிங்காரித்துக் கொண்டாள். அரவிந்த எப்போதும் தன்னிடம் சொல்லும் அந்த மஞ்சள் கலர் புடவையை உடம்பில் சுற்றிக் கொண்டாள். நேர் வகிடு எடுத்து நெற்றியில் அழகான ஸ்ரிக்கர் பொட்டு வைத்தாள். தான் வாசம் செய்யவிருக்கும் கோயிலுக்குப் போவதற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். தாயிடம் அரவிந்த் வீட்டிற்குப் போவதாகச் சொன்னாள்.

  “இன்றைக்கு ஆட்கள் வருகின்றார்கள். நேரத்திற்கு வந்துவிடு“ என்று சொல்லிய தாயின் பேச்சுக்கள் அவள் காதில் விழவில்லை. இன்று தீர்க்கமாக அவளுடைய மனம் முடிவை எடுத்திருந்தது. இன்று எப்படியும் அரவிந்த் உடன் பேசிவிட வேண்டும். அவனுடைய பலநாள் கேள்விக்கு இன்று அவனுடைய நிறைவான பதிலைச் சொல்ல வேண்டும். இருவரும் இணைந்து பறக்கப் போகும் திருமண மஞ்சத்தை அவனிடம் சொல்லி மகிழவேண்டும் என மகிழ்ச்சி வெள்ளத்தில் மனம் சிறகடித்தது. அரவிந்த வீட்டை அடைந்தாள். வாசல் அழைப்புமணியை அழுத்தினாள்.

  உள்ளே பலருடைய பேச்சுச் சத்தம் கேட்டது, யாரோ விருந்தினர்கள் வந்திருக்கின்றார்கள். என்று நினைத்தபடி நின்றிருந்தாள். அரவிந்த் இனுடைய தங்கையே கதவைத் திறந்தாள். நேரே இருந்த ஹோலில் தட்டம் மாற்றப்படுகின்றது. ஏதோ சுபகாரியம் என்பதை நடைமுறைகள் காட்டிக் கொடுத்தன. அரவிந்த்  தங்கை ராணி வாசுகியைக் கண்டாள்.

  “வாசுகி What a Surprise  சரியான நேரத்துக்கு வந்திருக்கிறாய். அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. நீ இல்லாமல் எப்படி? கடவுளே உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார். வா… வா…. . 

  வாசுகி அறையை நோக்கி நடக்கிறாள். தவிடு பொடியாகிச் சிதைந்து கிடக்கும் தன் நம்பிக்கையை மனதுக்குள் அஸ்தமனமாக்கி விட்டாள். ஏதோ சொல்ல வந்த வாசுகி. அரவிந்தன் எதிர்கால வாழ்க்கைக்கு தன் வாயால் மட்டும் வாழ்த்துச் சொல்லுகிறாள்.


  2 கருத்துகள்:

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...