• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  செவ்வாய், 24 செப்டம்பர், 2019

  இந்த பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம்,

  இந்த பிரபஞ்சத்தில் நாம் எங்கே இருக்கின்றோம், எந்த அளவாக நாம் இருக்கின்றோம், எமது அறிவு பிற உயிர்களுடன் ஒப்பிடும் பொழுது எப்படியானது என்பன பற்றி ஆராய்வதே இக்கட்டுரை.

                நாம் வாழும் பூமி சூரியக்குடும்பத்தைச் சேர்ந்தது. இச்சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்களும் அவை பிரயாணம் செய்கின்ற பாதைகளும் அமைந்த பரப்பு சிற்றண்டம் என்று அழைக்கப்படும். நாம் வாழுகின்ற பூமி தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வரும் பாதை இந்தச் சிற்றண்டத்திலேயே அடங்குகின்றது. 1008 சிற்றண்டங்கள் சேர்ந்த பரப்பு ஒரு பேரண்டமாகும். 1002 பேரண்டங்கள் சேர்ந்த பரப்பு ஒரு புவனம் ஆகும். 2214 புவனங்கள் சேர்ந்த பரப்பு சாகரம் எனப்படுகின்றது. 7 சாகரங்கள் சேர்ந்த பரப்பு பதம் எனப்படுகிறது. 814 பதங்கள் சேர்ந்ததே இந்தப் பிரபஞ்சம் என பிரபஞ்சப் படைப்புப் பற்றி தொன்மைத் தத்துவங்களும் அண்மை அறிவியலும் என்னும் நூலில் இருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது. நாம் வாழும் பூமி 51 கோடியே 66 ஆயிரம் கிலோ மீற்றர் கொண்டது. எனவே நாம் வாழுகின்ற பூமியில் நாம் வாழும் பகுதி எந்த அளவில் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் நாங்கள் எந்த அளவில் இருக்கின்றோம் என்பதை இப்போது எம்மால் அறியக் கூடியதாக இருக்கின்றது.

                   நாம் வாழும் பூமி 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. அதன் வயது 460 கோடி வருடங்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். இத்தனை கோடி வருடங்களில் நிலம், நீர், காற்று போன்றவற்றில் சிறிய நுண்ணுயிர்கள, தாவரங்கள், பூச்சிகள், ஊர்வன,  விலங்குகள், மனிதன் என ஒரு பில்லியனுக்கும் அதிகமான வகையான உயிரினங்கள் வாழுகின்றன. அவற்றுள் ஒரு இனமே மனித இனம். இம்மனித இனத்திலே நாமே அறிவாளிகள். எம்மை மிஞ்ச ஆளும் இல்லை. எமக்கு நிகர் எவரும் இல்லை என மார்பு தட்டிக் கொள்ளும் நாம், இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்.  இந்த பிரபஞ்சத்தில் பூமி தவிர்ந்த வேற்றுப் பிரபஞ்சப்பரப்பில் எம்மைப் போன்ற மனிதர்களோ வேறு விதமான உயிரினங்களோ வாழ்கின்றனவா என ஆராய்ச்சியாளர்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். எழுத்தாளர்களும் கற்பனையில் உயிர்கள் இப்படி இருக்கலாம் என்று அப்படி இருக்கலாம் என்று வடிவங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது பற்றிய விதம் விதமான ஆங்கிலப்படங்கள் வெளிவந்துள்ளன. ஒரு அண்டத்தில் இருந்து பிற அண்டத்தை அடையவே மனிதனின் ஆயுள் காலம் முடிந்து விடும். இந்த அற்புதமான பிரபஞ்சப் படைப்பில் மனிதனும் அவன் போன்ற வேற்றுக் கிரகவாசிகளும் இம்முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதே எனது கற்பனையாகின்றது.


            எமது 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தான் தாவரங்கள் தோன்றின என்றும், உலகில் மனிதனின் தொகை 700 கோடியாக அதிகரித்துள்ளது என்பதும் ஆய்வாளர்கள் கணிப்பீடு. இக்கணிப்பீடில் எமது ஆயுள் காலம் எத்தனை. நாம் வாழும் காலப்பகுதியில் திருவள்ளுவர், சுவாமி விபுலானந்த அடிகளார், தனிநாயகம் அடிகளார், விவேகானந்தர், கண்ணதாசன், சூரிய மையக் கோட்பாட்டை அறிவித்த Nicolaus Copernicus, மரபியலின் தந்தை Gregor Johann Mendel, தத்துவஞானி Socrates பரிமாணவளர்ச்சிக் கொள்கையாளர் Charles Robert Darwin போன்ற எத்தனையோ எழுத்தாளர்கள்சுவாமிகள், மேதாவிகள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளைக் கண்டிருக்கின்றோம். கேள்விப்பட்டிருக்கின்றோம். தற்போது இணையம் அவர்களை அடையாளம் காட்டுகிறது. காலப்போக்கில் எம்முடைய வீடியோ நாடாக்கள், ஒலி நாடாக்கள் மறைந்து போனது போல் இணைய வடிவமும் மாறலாம். அப்போது இணையம் தொலைத்து ரொபோட்டோக்கள் தேடும் காலங்களில் இவர்கள் மறக்கப்படலாம். இவர்கள் நினைக்கப்பட்டாலும் அவர்கள் ஆயுள் காலத்தின் பின் இவர்கள் ஆற்றிய சேவைகளும் பணிகளும் அவர்கள் இறப்பின் பின் அவர்களுக்கு என்னவாகின்றது? அவர்கள் மத்தியில் நாம் எங்கே நிற்கின்றோம்? என்பதை ஓடிக் கொண்டே இருக்கும் நாம் சிந்தித்துப் பார்க்கும் நிலையில் இருக்கின்றோம். எமது சந்ததியை முன்னோக்கிப் பார்க்கின்ற போது எமது தந்தையின் தந்தையை அல்லது எமது தந்தையின் பாட்டனின் பெயர் எமக்குத் தெரிந்திருக்கின்றதா? இல்லை அவர்பற்றி அறிகின்றோமா? இங்கு எமது நிலை இப்பிரபஞ்ச வாழ்நாளில் எங்கே என்று இப்போது அறிந்து கொள்கின்றோம்.


        இத்தேடல் என்பது மனிதனில் மட்டும்தான் இருக்கின்றதா இல்லை வேறு உயிரினங்களிலும் இருக்கின்றனவா? என்பன கேள்விக்குறிகள். பூமியில் கோடிக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. அவற்றை தொல்காப்பியர் 

  ''ஒன்ற றிவதுவே உற்ற றிவதுவே
  இரண்டறிவதுவே அதனொடு நாவே
  மூன்றறிவதுவெ அவற்றொடு மூக்கே
  நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
  ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
  ஆறறிவதுவெ அவற்றொடு மனனே
  நேரிதி உயர்ந்தோர் நெறிப்படுத்தினரே''

  என ஓரறிவு, ஈரறிவென வகைப்படுத்தினார். ஆனால் இவ்வகைப்படுத்தலை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. லின்னேயஸ் என்னும் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி 1707 ஆம் ஆண்டிலே உயிர்களின் உடலமைப்பு, தன்மை, இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தினார். உயிரினங்கள் முதலில் தாவரங்கள், பிராணிகள் என்று வேறுபடுத்தினார். பிராணிகளில் முதுகெலும்பு உள்ளவை, முதுகெலும்பு இல்லாதவை என்று இரு உபபிரிவுகள் உள்ளன. முதுகெலும்பு உள்ளவை மீன், தவளை, ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என்று 5 பிரிவுகள் உள்ளன. முதுகெலும்பு இல்லாதவை அமீபா, கடற்பஞ்சி, மண்புழு, பூச்சி, சிப்பி, நட்சத்திரமீன் ஆகியன அடங்கும்.


  தாவரங்களில் இரு பெரும் பிரிவுகள் உண்டு. பூ உள்ளவை, பூ இல்லாதவை. பூவுள்ள தாவரங்களில் மூடிய விதையுள்ளவை, மூடாத விதை உள்ளவை என இருவகைப்படுகின்றன. ஆல்கா, காளான், பாசி, பிரணி ஆகியவை பூக்காத தாவரங்களாகின்றன. பாலூட்டிகள் குட்டி போட்டு பால் தருபவை. ஆடும், மாடும் ஒரே குடும்பம் . பூனையும், புலியும் ஒரு குடும்பம் . கழுதையும், குதிரையும் ஒரே குடும்பம். இவற்றில் சைவமும் அசைவமும் உள்ளன. ஊர்வனவற்றுள்ள பாலூட்டிகள் உஷ்ண ரத்தம் உடையவை. நுரையீரல்களால் சுவாசிப்பவை. பறவைகளும் நுரையீரலால் சுவாசிக்கின்றன. ஆனால் அவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை. ஒவ்வொரு பிரிவிலும் வௌ;வேறு லட்சணங்களும், பாகுபாடுகளும் இருக்கின்றன. இவ்வாறு லின்னேயஸ் அவர்களுடைய ஆராய்ச்சி செல்கின்றது.

                இவற்றுடன் மனிதனின் திறமையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் எம்மை நாமே மெச்சிக் கொள்வது போலியாகவே படுகின்றது. பிறருக்காக எம்மை நாம் இழக்கின்றோம் சமூகசேவை செய்கின்றோம் என்று சொல்லும்போது முதலையின் பல் இடுக்கிலே இறைச்சி பொறுத்துவிட்டால், ஆ என்றபடி வாயை விரித்தபடி நீரினுள் முதலை படுத்திருக்கும். அப்போது குகிமா என்னும் குருவி வாயினுள் இருந்தபடி அதன் பற்களை துப்பரவு செய்துவிட்டுப் பறந்துவிடும். காகம் வீதியில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை துப்பரவு செய்து செல்வதுடன் உணவுகளைக் கண்டால் கா...கா.. எனக் கத்தி தன் இனத்திற்கும் உணவுகளைப் பகிர்ந்தளிக்கும். இதுவும் ஒரு சமூக சேவையே.

           மனிதர்களில் சிறந்த கட்டிடக் கலை விற்பனர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றோம் கண்களே இல்லாத கறையான்கள் சிறந்த கட்டிடக்கலை நிபுணர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியதே. இவர்களில் அரசன், அரசி, தொழிலாளர்கள், படைவீரர்கள், போன்ற பல பிரிவுகள் இருக்கின்றன. தொழிலாளர் கறையான்கள் செம்மண்ணை உண்ணும் அச்செம்மண் வயிற்றினுள் சென்று அமிலங்களுடன் சேர்ந்து ஒருவகை பதார்த்தமாகும். இதனை வாயினால் வெளியெடுத்தே தன் கட்டிடப்பணியைத் தொழிலாளர் கறையான்கள் மேற்கொள்ளும். இக்கட்டிடத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டுவிட்டால், டிக்டிக் என்று மற்றைய கறையான்கள் தட்டும்போது தொழிலாளர் கறையான்கள் வந்து திருத்த வேலைகளைச் செய்வார்கள். இக்கட்டிடத்தில் பலவகையான அறைகள் இருக்கின்றன. உலாவும் அறையும் உண்டு. தொனேசியாவிலுள்ள ஒரு கறையான் புற்று 15,000 தொன் எடையுள்ளது. இது 150 ஆண்டுகள் பழைமையானது. சோழர்காலக் கட்டிடடம், பல்லவர்காலக் கட்டிடம் என நாமும் பெருமை பேசிக் கொள்ளுகின்றோம். ஆபிரிக்கக் காட்டிலுள்ள கறையான் புற்றுக்களை  யானைகளால்கூட உடைக்க முடியாது. இந்ந புற்றுக்களை 21 பாகை சென்ரிகிறேட்டிலிருந்து 36 பாகை சென்ரிகிறேட் வரை வெப்பநிலையில் வைத்திருப்பார்கள். தொழிலாளர்கள் கட்டிடம் கட்ட பாதுகாப்புப் பணியைப் படைவீரர்கள் செய்கின்றார்கள். படைவீரர்கள் மெழுகுபோல் ஒரு எச்சிலை அக்கட்டிடத்தில் உமிழ்ந்துவிட அம்மணத்தில் பூச்சிகள் நெருங்காது. மீறி நெருங்கும் பூச்சிகளை படைவீரர்கள் கொன்றுவிடுவார்கள். இப்போது நினைத்துப் பாருங்கள் நாம் மட்டுமா நாட்டையும் வீட்டையும் காக்கின்றோம்? இப்படிப் பல பணிகளைப் பிரித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்து ஒரு இராச்சியமே நடத்தும் கறையான்களைப் பற்றி எம்முடைய ஒளவைப்பாட்டி என்ன சொல்ல வருகின்றார் என்று பார்ப்போம்.  வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
  தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் யாம்பெரிதும்
  வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
  எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது

  தூக்கணாங்குருவிக் கூடு, தேன்கூடு, கறையான் புற்று இவை யாருக்கும் செய்வது அரிது. எனவே யாம் கெட்டிக்காரர் என்று வலிமை சொல்ல வேண்டாம் என்று உறைக்கச் சொல்லுகின்றார்.

        கடலில் ஆயிரக் கணக்கான உயிரினங்கள், தாவரங்கள் வாழுகின்றன. இவற்றில் சில தாவரங்கள் மீன்களைப் பிடித்து இழுத்து உண்ணுகின்றன. சிலவகை மீன்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வாயினால் ஒரு வகை வாயுவைக் கக்கித் தம்மைப் பாதுகாக்கும் சிலவகை மீன்கள் தலை,வால் பகுதியில் மின் விளக்குகள் போன்ற ஒளியை உருவாக்கி மீன்களை மயக்கி இழுத்து இரையாக்கிக் கொள்ளுகின்றன. இது தம்மைத்தாம் பிரபல்யப்படுத்துவதற்கு ஓடித்திரிகின்ற மனிதர்களைப் போலவே தமக்கு வெளிச்சம் போட்டுத் திரிவதைக் காணக்கூடியதாக இருக்கின்றன. இதைவிட விலாங்கு மீனின் தலைப்பகுதி பாம்பைப் போன்றிருக்கும் வால்பகுதி மீனைப் போன்றிருக்கும். அது மீனுக்கு வாலைக் காட்டி மீனினம் என்று தப்பிக் கொள்ளும் பாம்புக்கு தலையைக் காட்டி பாம்பு இனம் என்று தப்பிக் கொள்ளும். இவ்வாறான விலாங்குமீன் போன்ற மனிதர்களை நாம் வாழும் காலத்தில் கண்டிருக்கின்றோம். எனவே கடல் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிடும் போது நம் பெருமையை நாம் சொல்ல வழியில்லாமல் போகின்றது அல்லவா.

  கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
  அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே
  நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
  மாட்டா தவனன் மரம்

  என்று தரப்படுகின்ற எழுதப்பட்ட செய்தியை ஒரு சபையிலே வாசிக்கத் தெரியாதவனை மரம் என்று இகழ்ந்தார் ஒளவைப்பிராட்டி. ஆனால்,

  'மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்
  மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்'

  எனக் கவிதை பாடிய கவிப்பேரரசு வைரமுத்து மரங்களின் அத்தனை மகிமையையும் எடுத்துக் காட்டி மரங்களைப் பெருமைப்படுத்தினார்.

  வேர்களால் உண்ட நீரை தலையாலே எமக்குத் திருப்பித் தருகின்ற தென்னையை எமது உபகாரத்திற்கு ஒப்பிடுவோமா. தன்னுடைய அங்கங்கள் அனைத்தையும் எமக்குப் பயன்படத் தருகின்ற பனையை எமது உபகாரத்திற்கு எடுத்துரைப்போமா?
  நோய்களுக்கு மருந்தாக வாய்க்குச் சுவையாக வாழ்க்கைக்கு உதவியாகப் பயன்படுகின்ற மரங்களுக்குள் ஆச்சரியப்பட வைக்கும் பண்புகள் இருக்கின்றன.

          இவ்வாறு உலகப்படைப்பின் அனைத்தும் அற்புதமே. அனைத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் .......?


  2 கருத்துகள்:

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  வாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்

    சூரியனின் கவர்ச்சி இல்லாவிட்டால் பூமியால் நிலையாகச் சரியாக தன்வழிப் பாதையில் சுழலமுடியுமா? புவியீர்ப்பு சக்தியின்றி மனிதர்களால் நிலைத்து ந...