• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  ஞாயிறு, 5 ஜூலை, 2020

  ஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றமும் தற்கால வாழ்க்கை முறையும்
  எழுத்துரு மாற்றத்திற்கு உதவிய வலைச் சித்தர் தனபாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. பெயருக்கு ஏற்றது போல் பொறுமையாக விளக்கம் தந்த அவருக்கு மேலும் பாராட்டுக்களும் நன்றியும் 

  இலங்கை மண்ணில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் மக்கள் மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தி இருந்தாலும், ஜேர்மனிய மண்ணில் தமிழர்களின் குடியேற்றம் ஒரு வகையில் மக்களின் வளர்ச்சிப் போக்கிற்கு வழி வகுத்திருக்கின்றது, மனங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றது, ஏற்றத்தாழ்வுகளை மாற்றியும் அமைத்திருக்கின்றது, கல்வியறிவில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றது. இவற்றைவிட கலாசார மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன் போரின் தாக்கம் பாதிக்கப்பட்ட மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதனால் பின்விளைவுகள் பலவற்றை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

  தாய்நாட்டில் வாழ்ந்த மக்கள் போரின் காரணத்தினால், உடைமைகளை இழந்து வெறும் கையுடன் புலம்பெயர்ந்த நாட்டுக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்களிடம் இருந்த சொத்து மதிப்பு 10 விரல்களும், நம்பிக்கை என்னும் உயரிய ஆயதமும் மட்டுமே. அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் கற்றவர்கள் மட்டுமன்றி சகல தரப்பினரும் கொழும்பு விமானநிலையத்தை முதல் தடவையாகப் பார்த்தவர்களும், வீட்டை விட்டு வெளியே போகாமல் குடும்பம், பிள்ளை என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் தம்மை அடக்கிக் கொண்டு வாழந்த எத்தனையோ தாய்மார்களும் இவர்களுக்குள் அடங்குகின்றார்கள்

  . எம்முடைய தமிழர்கள் தம்முடைய வீட்டை விற்று, தாலிக்கொடியை விற்று, வளவை விற்று, கடன்கள் பெற்று, தரகர்களிடம் பணத்தை அள்ளிக் கொடுத்துத் தம் உறவுகளை விட்டு தம்முடைய உயிரைப் பாதுகாக்க என்று அந்நியநாடுகளுக்குள் புகுந்தார்கள். அவர்கள் எவ்வாறு எல்லாம் புலம் பெயர்ந்தார்கள் என்று எத்தனையோ எழுத்தாளர்கள் கதையாகக், கவிதையாகக், கட்டுரையாக விளக்கியுள்ளார்கள். ஆனால், இன்று தமிழ் மக்கள் போர் நிமித்தம் புலம்பெயர்ந்து சுமார் 35 வருடங்கள் கடந்துவிட்டன. தற்பொழுது 50.000 இலங்கைத்தமிழர்கள் ஜேர்மனியில் வாழுகின்றார்கள். இப்போது புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழும் மக்கள் நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன என்பது பற்றிச் சிறிது சிந்திப்பதே இக்கட்டுரை.

  உலகம் முழுவதும் சிதறிப் பரந்த தமிழ் இனம். ஜேர்மனி மண்ணையும் தொட்டது. ஒரு இடத்தில் நட்ட மரத்தை இன்னும் ஒரு இடத்தில் பிடுங்கி நட்டால், அம்மரம் தளர்ச்சி கண்டு மீண்டும் துளிர்க்கும் இல்லையேல் பட்டுப்போகும். அது போலவே இலங்கை மண்ணில் வாழ்ந்த மக்கள், புரியாத கலாசாரம், புரியாத காலநிலை, புரியாத மொழி, புரியாத மக்கள் என்று சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தது போல் ஜேர்மனி நாட்டைப் பார்த்தார்கள். வலிமையுள்ளது வாழும் என்ற கூர்ப்புக் கோட்பாட்டின்படி இம்மண்ணிலும் தமிழ் இனம் தலைத்தோங்கியது. தமிழ் மொழி அறிவுடனும் சிறிதளவு ஆங்கில அறிவுடனும் ஜேர்மனிய நாட்டுக்குள் தமிழர்கள் புகுந்த போது அகதி அந்தஸ்தைத் தம்முடைய முதல் அடையாளமாகப் பெற்றுக் கொண்டனர்.

  ஒரு இனம் வாழ வேண்டுமானால், அவ் இனத்தின் மொழி வாழ வேண்டும். தம்மை அடையாளப்படுத்துவதற்கு முதலில் மொழியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டனர். ஜேர்மனிய மொழி பாடசாலைக்குச் சென்று கற்கக் கூடிய வசதி வாய்ப்புக்கள் தமிழர்களுக்கு அவர்கள் புலம்பெயர்ந்த காலப்பகுதிகளில் கிடைக்கவில்லை. தம்முடைய இருப்புக்களை உறுதியாக ஊன்றிக்கொள்ள கிடைத்த வேலைகளை கிடைத்த போதெல்லாம் செய்யத் தொடங்கினர். தம்முடைய வளங்களைப் பெருக்கினர். ஜேர்மனிய இனமே மெச்சத்தக்க வகையில் வாழ்ந்து காட்டினர்.

  “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
  மாடுஅல்ல மற்றை யவை”

  கொடுத்தாலும் குறைவுபடாத மேன்மையான செல்வம் கல்வியே. ஆகவே பிற செல்வங்கள் உயர்ந்த செல்வங்களாக மதிக்கப்படுவதில்லை என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க ஜேர்மனிய அரசின் உதவியுடன் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியறிவைப் பெற்றோர்கள் ஊட்டி வளர்த்தனர் என்றால், அது மிகையில்லை. பெற்றோர்கள் போட்டி போட்டுப் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக முயற்சி மேற்கொண்டனர். ஜிம்னாசியம் என்று அழைக்கப்படும் உயர்தர பாடசாலைக்குத் தம்முடைய பிள்ளைகளை அனுப்புவதற்காகத் தம்முடைய முழுமுயற்சிளையும் எடுத்தனர். இந்தப் போட்டியும், பொறாமையும் வேடிக்கையாக இருந்தாலும் இன்று ஜேர்மனிய மண்ணிலே சிறந்த தமிழ் கல்வியாளர்களை, பொறியியலாளர்களை, வைத்தியர்களை, கணக்காளர்களை, சிறந்த உத்தியோகத்தர்களை ஜேர்மனியர்களுக்கு இணையாகக் காண்பதற்கு இந்தப் போட்டியும், பொறாமையுமே காரணமாக இருந்திருக்கின்றது.

  “ஒரு நாட்டிற்கு நிரந்தர செல்வத்தைத் தேடித் தருபவர்கள் ஆசிரியர்கள்” என்று அறிஞர் அண்ணா கூறியிருக்கின்றார். ஓய்வு நேரங்களில் தம்முடைய தாய் மொழியைத் தம்முடைய பிள்ளைகளுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்கள். இதற்குக் கற்றறிந்த பெற்றோர்கள் எவ்வித வேதனத்தையும் எதிர்பார்க்காது சேவை மனப்பாங்குடன் பிள்ளைகளுக்குத் தமிழ்க் கல்வி போதித்தார்கள். தாம் தங்கியிருந்த அகதி முகாமிலேயே ஒரு சிறு அறையில் தமிழ் கற்பிக்கத் தொடங்கினார்கள். அது வளர்ந்து தமிழாலயம், தமிழ் கல்விச்சேவை, தமிழ் கல்விக்கழகம் போன்ற பல பெயர்களில் விரிவடைந்தன.  எதிர்காலத் தலைமுறையினருக்கு தாய்மொழியாம் தமிழ் மொழியை ஊட்டி வளர்த்தனர்.

  “வேறுவேறு பாஷைகள் கற்பாய் வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ"  “தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்படிச் செய்ய வேண்டும்" என்று பாரதி கேட்டுக் கொண்டது போல் வாழ்ந்து காட்டினார்கள். உலகின் முதன்மொழி தமிழ் மொழி என்பதை உலக இனங்கள் எல்லாம் அறியும் வண்ணம் எடுத்துக்காட்டுகளை எம்முடைய இளங்தலைமுறையினரே இனங்காட்டுகின்றனர். மேடைகளில் தமிழ் முழக்கம் செய்தனர். அது மட்டுமன்றி பெற்றோரின் அயராத உழைப்பிற்கும் ஊக்குவிப்புக்களுக்கும் ஏற்ப இன்று எமது தமிழ் இளந்தலைமுறையினர் ஜேர்மனிய மொழி கற்று ஜேர்மனிய நாட்டு அரசாங்கத் திணைக்களங்களிலும், மருத்துவ மனைகளிலும், பிரபல நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளை வகிப்பதுடன் தமிழர்களின் திறமையை இனம் காட்டுகின்றனர்.

  கூறுபடும் மொழிகளைப் போல் புதையவில்லை்கொஞ்சிப் பேசும் வழக்கற்றுக் குமையவில்லை சாறுபட்ட மரங்களைப் போல் சாயவில்லை தரங்கெட்ட மனிதர்களைப் போல் தாழவில்லை

  என்ற பெருஞ்சித்திரனார் பாடலுக்கமைய ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புக்களை அமைத்துப் பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியீடு செய்வதுடன் பல எழுத்தாளர்களை இனங்காட்டி, வெளிக் கொண்டு வருகின்றனர். இதற்குப் பல அமைப்புக்களும், ஊடகங்களும் கூடப் பணிபுரிகின்றன.

  தமிழ்மொழியிலே என் அறிவுக்கு எட்டிய வரையில் வெற்றிமணி, ஐ.பி.சி, அகரம், தமிழ்ரைம்ஸ் போன்ற பத்திரிகைகள் வெளிவருகின்றன. சிவத்தமிழ், மண் போன்ற சஞ்சிகைகள் வெளிவருகின்றன. எம்.ரி.வி, எஸ்.ரி.எஸ் போன்ற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. நுவுசு என்ற வானொலி ஒலிபரப்பப்படுகின்றது. இவ்வாறு தமிழ் பரப்பை விரிவுபடுத்துவதற்குப் பல அர்ப்பணிப்புக்களைச் செய்கின்ற மக்கள் ஜேர்மனி மண்ணில் வாழ்ந்து வருகின்றார்கள்.

  தமிழர்கள் ஒரு கிறிஸ்தவ நாட்டில் வாழ்ந்தாலும் பாரம்பரியமாக எம்முடைய பரம்பரை பண்பாட்டுக் கூறுகளை, உணவு உடை பழக்கவழக்கங்களை, சமய நம்பிக்கைகளை சிறிதளவும் மறந்ததில்லை. தம்முடைய அகதி முகாமிலேயே ஒரு சிறிய அறையில் சுவாமிப் படங்களை வைத்து இந்து ஆலயமாக வழிபடத் தொடங்கினார்கள். அது விரிவடைந்து பல பரப்பில் கட்டப்பட்ட கோபுரங்களுடன் கூடிய கோயில்களாக மாறியுள்ளன. இவ்வருடம் 2019 இல் கிட்டத்தட்ட 14.000 மக்கள் ஹம் என்னும் நகரத்தில் அமைந்திருக்கின்ற காமாட்சி அம்மன் ஆலய உற்சவத்திற்கு வந்திருந்ததாக கணிப்பீடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதேபோல் ஸ்வெற்றா, ஹற்றிங்கன், டோட்முன்ட், ஸ்ருட்காட் என்று ஜேர்மனியில் தமிழ் மக்கள் பரவலாக வாழுகின்ற நகரங்களில் எல்லாம் பல ஆலயங்கள் அமைக்கப்பட்டு சிறப்புப் பெற்று திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

  மொழியும், மதமும் போற்றிப் பாதுகாக்கப்படுவதுபோல் கலைகளையும் தம்முடைய பிள்ளைகளுக்குக் கற்பிக்க பெற்றோர் தயங்கியதில்லை. கர்நாடக சங்கீதம், வயலின், பரதநாட்டியம், வீணை, மிருதங்கம், தவில் போன்ற கலைகளும் மேற்கத்தைய நடனங்களையும், இசைக்கருவிகளையும் கூட தம்முடைய பிள்ளைகளுக்குக் கற்பித்துப் பேரும் புகழும் அடைந்துள்ளார்கள்.

  தாம் வாழும் மண் தமக்களித்த வசதி வாய்ப்புக்களை வைத்துத் தாம் பிறந்த மண்ணை மறக்காத தமிழர்கள் அதிகமானவர்கள் நம் மத்தியில் வாழுகின்றார்கள். இலங்கையிலுள்ள அநாதை விடுதிகளுக்கும், வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கும் ஜேர்மனியில் இருந்தவண்ணம் பண உதவிகளையும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகளையும் செய்து கொண்டு வருகின்றார்கள்.

  இவ்வாறு ஜேர்மனியில் தமிழ் இனம் வளர்ச்சி கண்டு சொந்தமாக வீடு, வியாபார ஸ்தாபனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், வாகன வசதிகள் போன்ற சகல சைளகரியங்களுடனும் ஜேர்மனிய மக்களுக்கு நிகராக வாழ்ந்து வருகின்றார்கள். இவ்வாறு எமது தமிழ் மக்கள் ஜேர்மனிய மண்ணில் வாழ்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஜேர்மனிய மக்களின் மனிதாபிமானப் பண்புகளும், விட்டுக்கொடுப்புக்களும், எல்லோரையும் சமமாக மதிக்கும் உயரிய பண்புமே என்பதில் சிறிதளவும் சந்தேகமில்ல.

  ஜேர்மனி நாட்டில் தமிழர்கள் மூன்றாவது தலைமுறையினரைக் கண்டுவிட்டார்கள். இப்போது விரும்பியோ விரும்பாமலே பெற்றோர் தம்முடைய பிள்ளைகளின் கலாசார கலப்புக்கு தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். பன்மொழிக்கலாசாரததி;ல் வாழும் பிள்ளைகளின் இயற்கை விருப்பிற்கு ஏற்ப இந்த மண்ணில் வாழுகின்ற ஜேர்மனி, போலந்து, துருக்கி, மொறக்கோ, கிறிஸ்லாந்து, போன்ற பல நாட்டு பிள்ளைகளின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களைத் தம்முடைய வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டு வாழ்கின்றார்கள். ஆயினும் சில பெற்றோர்கள் வெள்ளை இன மக்களைத் திருமணம் செய்தாலும் பறவாயில்லை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சாதி குறைந்தவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிடிவாதமாக இருப்பதனால், பெற்றோரைப் பிரிந்து வாழுகின்ற பல இளந்தலைமுறையினர் ஜேர்மனியில் இப்போதும் காணப்படுகின்றார்கள். ஆனால், மக்களை சாதி வழமையால் பிரிப்பது அருவருக்கத்தக்கது என்று இளந்தலைமுறையினர் கூறுவதை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது. இம்மனப்போக்கு எதிர்காலத் தலைமுறையினருடன் எம்முடைய பெற்றோரின் பிடிவாதப் பண்பு உடைத்தெறியப்படும் என்பது நிச்சயமான உண்மையாக கருதப்படுகின்றது.

  பண பலம் மிக்க தமிழ் தனவந்தர்கள் தம்முடைய பணபலத்தைப் பலருக்கும் காட்டுவதற்கு விழாக்களைக் கோலாகலமாக நடத்துகின்றனர். அதனைப் பார்த்து பண பலமற்றவர்கள் கூட கடன் பெற்று திருமண வைபவங்களையும், பூப்புனித நீராட்டு விழாக்களையும், பிறந்தநாள் வைபவங்களையும் நடத்தி கடன்காரர்களாக வாழ்வதைத் தற்போது காணக்கூடியதாக இருக்கின்றது. ஓயாத உழைப்பும், கடன் தொல்லையும் பல ஆண்களை இருதய நோயாளியாக்கி மரணத்தைத் தழுவச் செய்திருக்கின்றது. 18 ஆவது பிறந்தநாள் விழாவில் தம்முடைய பிள்ளைகளுக்கு அதிக விலை மதிப்புள்ள வாகனங்களைப் பெற்றோர் பரிசளிப்பதும். அதன் பெறுமதி உணராது வயதுக் கோளாறினால், பிள்ளைகள் விபத்துக்களைச் சந்திப்பதும், ஹெலிகொப்டர்களில் மாப்பிள்ளை, பெண் அழைப்பு, தேரில் பவனி, போன்ற ஆடம்பரான விழாக்களும் தற்போது நடக்கின்றன. கடினமான தொழில்களைச் செய்து சம்பாதிக்கின்ற பணத்தை, இவ்வாறான அர்த்தமற்ற செலவுகளைச் செய்வதன் மூலம் பணத்தின் பெறுமதியைப் பிள்ளைகள் உணர்ந்து கொள்வதில்லை.

  போர்க் காலங்களில் தம்முடைய உடைமைகளையும், உறவுகளையும் பறி கொடுத்த தாக்கம் மனிதர்கள் மனநிலையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தம்முடைய நினவுகளை மறப்பதற்காக குடிக்கு அடிமையான பலர் புலம்பெயர்வில் இளவயதிலேயே உயிரை இழக்கின்றார்கள். மனநிலை பாதிக்கப்பட்ட பல கணவன்மார்கள் மனைவிமாரைத் துன்புறுத்தி பல இன்னல்களை அனுபவிக்கின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையிலும் விவாகரத்து ஜேர்மனிய மண்ணிலே தமிழர்களிடையே அதிகரித்துள்ளதை நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது. பணத்தைக் கொட்டித் திருமணவிழாவை நடத்தி அடுத்த இரு மாதங்களின் பின் விவாகரத்துக் கேட்டு பெற்றோரிடம் திரும்பும் எத்தனையோ இளைய தலைமுறையினரை தற்காலத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. அளவுக்கு மிஞ்சிய பெண் சுதந்திரமும் விவாகரத்துக்களை அதிகரிக்கச் செய்துள்ளது. இது தற்போது சர்வசாதாரணமாகப்படுகின்றது. இதனால் பல பெற்றோர்கள் மனஉழைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

  சில பெற்றோர்களின் தவறான வழிகாட்டலில் வாழுகின்ற பிள்ளைகள் தம்முடைய சுயபண்புகளை இழந்து காணப்படுகின்றார்கள். தாம் வாழுகின்ற நாடு எமக்கு வசதி வாய்ப்புக்களைத் தந்திருக்கின்றது. பொது உடைமைகளை சீரழிக்கக் கூடாது. கிடைக்கின்ற பயன்களைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். அரசாங்கப் பணத்தில் வாழ்வதும். அப்பணத்தை முறையற்ற வழியில் செலவு செய்வதும் சில தரமற்ற பிள்ளைகளிடையே காணப்படுகின்றது. இவ்வாறான பிள்ளைகளுக்குச் சூழலும் கைகொடுக்கின்றது. பல மொழி கலாசாரத்தில் வாழுகின்ற போது இவற்றை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.

  இவ்வாறான தவறுகள் சிலவற்றைக் காலம் மறக்கச் செய்யும் என்றே கருதுகின்றேன். இந்த மண்ணில் கால் வைத்தபோது நாம் எவ்வாறு இருந்தோம் என்பதை எமது மக்கள் பலர் மறந்து விட்டனர். ஆயினும் காலம் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவருக்கும் கற்றுத் தருகின்றது என்பதே உண்மை.

  ஆனால், இனிவரும் காலங்களில் எமது மொழி, கலாசார பண்புகள் எதிர்வரும் தலைமுறையினருக்கு எவ்வாறு கடத்தப்படும், போற்றிப் பாதுகாக்கப்படும் என்பது பெற்றோர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. கலப்புத் திருமணமானது மொழி, கலாசாரத்தை எதிர்காலத்தில் எந்த அளவில் பாதுகாக்கும்? வேற்றுமொழியில் கல்வி, தொழில் புரிகின்ற எமது இளஞ்சமுதாயம் எமக்குப் பின் தமிழ் மொழியை எந்த அளவிற்குக் கொண்டு செல்வார்கள்? என்ற சந்தேகங்களுடனேயே இங்குள்ள தமிழ் கல்வி நிறுவனங்களும், இலக்கிய சங்கங்களும், தமிழ் ஊடகங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எமக்குப் பின் இவற்றையெல்லாம் யார் தொடர்ந்து கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கையற்ற மனங்களுடனேயே புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

  5 கருத்துகள்:

  1. புலம் பெயர்ந்த தமிழர்களால்தான் தமிழ் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
   தொடர்நது வாழும்

   பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி. உங்கள் உதவிக்கும் மிக்க நன்றி

   பதிலளிநீக்கு
  3. சிறப்பு .தாய்மண் நினைவுகள் ஜேர்மன் மண்ணில் நீடித்து நிலைபெறட்டும். வரலாறுகளையும் வலிகளையும் வெளிக்கொண்டு வருகிறது கட்டுரை .

   பதிலளிநீக்கு

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்

  உதவி செய்வது என்பது இப்போது விளம்பரமாகப் போய்விட்டது. வலது கை கொடுத்தால், இடது கைக்குப் புலப்படாது என்று இருந்த காலம் மாறி, இப்போது உதவி செய...